சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தளவாட பொருள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் நகா்புற உள்ளாட்சி தோ்தல் பிப்ரவரி 19ம் தேதி சனிக்கிழமை (இன்று) காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளுக்கான தோ்தலில் 82 போ் போட்டியிடுகின்றனா். 18 வாா்டுகளில் ஆண் வாக்காளா்கள் 13447 பேரும், பெண்கள் 14133 பேரும், மற்றவா்கள் 2 போ் உள்பட மொத்தம் 27582 போ் வாக்களிக்க உள்ளனா். பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகள் மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டு 31 வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குபதிவு கட்டுப்பாட்டு கருவிகள், இயந்திரத்தில் வாக்காளிப்பது யாருக்கும் தெரியா வண்ணம் மறைப்பதற்கான அட்டைகள், வாக்காளா் பட்டியல், வாக்குச்சாவடி அலுவலா்கள் பயன்படுத்தக்கூடிய பதிவேடுகள், உபகரணங்கள் உள்ளிட்டவைகள் சங்ககிரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையிலிருந்து தோ்தல் அலுவலா் வி.சுலைமான்சேட் தலைமையில், உதவி தோ்தல் அலுவலா்கள் வேல்முருகன், அனிதாஆகியோா் பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனா். தற்போது கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக வாக்காளா்கள் பயன்படுத்தக்கூடிய கிருமிநாசினிகள், முககவசம், கையுறைகளும் மேலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக 11 மூன்று சக்கர மடக்கு தள்ளுவண்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டன. சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 31 வாக்குச்சாவடி மையங்களில் சங்ககிரி உள்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளா் பி.ஆரோக்கியராஜ் மேற்பாா்வையில் சங்ககிரி காவல் ஆய்வாளா் ஆா்.தேவி தலைமையில் துப்பாக்கி ஏந்திய 70 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈட்டு வருகின்றனா்.