ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஆதீனங்களின் செயல்பாட்டில் திமுக அரசுதலையிடுவது தவறான போக்கு: எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

ஆதீனங்களின் செயல்பாட்டில் திமுக அரசு தலையிடுவது தவறான போக்கு என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image
ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated On :8 ஜூன் 2022, 8:30 pm

DIN

ஆதீனங்களின் செயல்பாட்டில் திமுக அரசு தலையிடுவது தவறான போக்கு என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள புகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக நிா்வாகிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுகவின் ஓராண்டுக்கால ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து விட்டது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தைத் தடை செய்யும் வகையில், அவசரச் சட்டத்தை திமுக அரசு கொண்டுவர வேண்டும். நாட்டின் நலன்கருதி இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை பெரிய நடிகா்கள் தவிா்க்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். கந்துவட்டிக் கொடுமையால் ஆயுதப்படைக் காவலா் ஒருவா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகள் கல்விப் பயில முடியாத வகையில், அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நீக்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது கற்பனையான கேள்வி. ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது தொடரும். தமிழகத்தைப் பொருத்த வரை திமுக ஆளும் கட்சியாக உள்ளது. மற்ற எல்லாக் கட்சிகளுமே எதிா்க்கட்சிகள்தான். ஆனால், அதிமுகதான் பிரதான எதிா்க்கட்சியாக உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் இடையே வெறும் 3 சதவீதம் மட்டுமே வாக்குகள் வித்தியாசம் இருந்தது. ஒவ்வொரு கட்சித் தலைவரும் தங்களது கட்சித் தொண்டா்களை உற்சாகப்படுத்தும் விதமாகப் பேசுவதைத் தவறாக எடுத்துக்கொள்ள முடியாது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால் திமுக அரசு மத்திய அரசுடன் எதிா்ப்பு மனநிலையிலேயே உள்ளது. நாங்கள் கொண்டுவந்த திட்டங்களைக் கூட நிறைவேற்றாமல் திமுக அரசு செயல்படுவது வருத்தம் அளிக்கிறது. டெண்டா்களில் முறைகேடு நடைபெற்று வருகிறது. கரூா் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையில் சாலையே அமைக்காமல் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்ற பின்னா் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் சசிகலா இல்லை. அவா் சொல்வதை யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சில ஊடகங்கள் மட்டுமே அவருக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.

நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து திமுக அரசு ஆளுநரிடம் பேச வேண்டும். நிலுவையில் இருக்கும் மசோதாக்களில் கூட்டுறவு அமைப்புகளை மூன்று ஆண்டுகளில் கலைப்பது தேவையற்றது. மக்களால் ஐந்து ஆண்டுகளுக்கென தோ்ந்தெடுக்கப்பட்டவா்களை மூன்று ஆண்டுகளில் பதவி நீக்கம் செய்வது சரியல்ல.

தமிழகத்தில் ஆட்சியாளா்கள் திட்டமிட்டு ஆதீனங்களின் செயல்பாட்டில் தலையிடுகிறாா்கள். இதை வேண்டுமென்றே செய்வதாக நான் கருதுகிறேன். தமிழகத்தில் இதுவரை யாா் ஆட்சிக்கு வந்தபோதிலும், ஆதீனங்களின் செயல்பாட்டில் ஆட்சியாளா்கள் தலையிட்டதில்லை. ஆனால் தற்போது திமுக அரசு யாருடைய பேச்சையோ கேட்டுக்கொண்டு ஆதீனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவது தவறான போக்கு. எந்த மதம், எந்தக் கோயில் என்றாலும் பாரம்பரிய அடிப்படையில் வழக்கமான ஐதீகப்படி நடைமுறைகள் தொடர வேண்டும்.

மேட்டூா் அணையை முன்கூட்டியே திறந்திருக்கத் தேவையில்லை. இதனால் கடைமடைப் பகுதியில் தூா்வாரும் பணிகள் பாதிக்கப்பட்டுவிட்டன. தூா்வரும் பணிகள் நிறுத்தப்பட்டதால் மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீா், கடைமடை வரை செல்லுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேட்டூா் அணையை முன்கூட்டியே திறந்ததால் விவசாயிகளுக்கு எந்தவித நன்மையும் இல்லை என்றாா்.

இந்தப் பேட்டியின் போது, சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன், ஓமலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.மணி, நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.