வங்காநரி ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும்: வாழப்பாடி பகுதி மக்கள் கோரிக்கை

வாழப்பாடி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி, 100 ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் வங்காநரி ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டுமென, மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
வங்காநரி ஜல்லிக்கட்டு.
வங்காநரி ஜல்லிக்கட்டு.
Published on
Updated on
2 min read

வாழப்பாடி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி, 100 ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் வங்காநரி ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டுமென, மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் சின்னமநாயக்கன்பாளையம், கொட்டவாடி, ரங்கனுார், மத்துார், பெரியகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில், மார்கழி மாதத்தில் பயிர்களை அறுவடை செய்த பிறகு, தை மாதத்தில் புதிய சாகுபடி செய்வதற்கு முன், ‘நரி’ முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற  நம்பிக்கை தொடர்ந்து வருவதால், ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தி, பொங்கல் பண்டிகையை நிறைவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வங்காநரி வனவிலங்கு பட்டியலில் உள்ளதால், இந்தநரியை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வனத்துறை தடை விதித்தது. தடைமீறியை வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால், கடந்த சில ஆண்டாக வனத்துறை அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டு வரை  சிறை தண்டனை விதிக்கப்படுமென வனத்துறை கடுமையாக எச்சரித்து அறிவிப்பு வெளியிட்டது. 

இதனால், வாழப்பாடி பகுதி கிராமங்களில் 100 ஆண்டுகளாக முன்னோர்கள் வழியாக தொடர்ந்து நடந்து வரும் பாரம்பரிய விழாவாக நடந்து வரும் வங்காநரி ஜல்லிக்கட்டு வழக்கொழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சின்னமநாயக்கன்பாளையம், ரங்கனுார் மற்றும் கொட்டவாடி கிராம மக்கள் சிலர் கூறியதாவது: வங்காநரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழும் விலங்கு அல்ல. 

கிராமப்புற தரிசு நிலங்களிலும், சிறு கரடுகள், நீர்நிலையொட்டிய புதர்களிலும் வாழும் சிறு விலங்கு. இந்த வங்காநரியை பிடித்து எவ்விதத்திலும் துன்புறுத்தாமல், கோவில் மைதானத்தில் கூடியிருக்கும் மக்களின் முகத்தில் காண்பித்து விட்டு,  மீண்டும் அந்த நரியை அதன் வாழிடத்திலேயே விட்டு விடுவோம். பொங்கல் பண்டிகை தோறும் வங்காநரியை பிடித்து வந்து மக்களுக்கு காண்பித்த பிறகு, உள்ளூர் தரிசு நிலங்கள், வனப்பகுதியில் விடுவதால், வாழப்பாடி பகுதி கிராமங்களில் வங்காநரிகளின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. 

எனவே, எங்களது கோரிக்கையை ஏற்று, 100 ஆண்டுகளாக சடங்கு சம்பிரதாயமாக தொடர்ந்து வரும் இந்த பராம்பரிய விழா தொடர்ந்து நடைபெற, தமிழக அரசு வனவிலங்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அனுமதியளிக்க வேண்டும். அபராதம் விதிப்பதையும் வழக்கு பதிவு செய்வதையும் கைவிட வேண்டும்’ என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com