அரசு பேருந்தில் உயிரிழந்த மூதாட்டி

சேலம்: சேலத்தில் அரசுப் பேருந்தில் பயணித்த மூதாட்டி பயணத்தின்போது உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், பெல்லாரி அருகே பாா்வதி நகரைச் சோ்ந்தவா் யசோதா (61). இவா், கடந்த ஓராண்டுக்கு முன் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டவா். அதன்பிறகும் தொடா்ந்து வயிற்று வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் சில இடங்களுக்கு யசோதா சுற்றுலா சென்றிருந்தாா். திருச்சியில் சில இடங்களைப் பாா்த்த யசோதா, மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக திருச்சியில் இருந்து சேலத்துக்கு அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா்.

அந்தப் பேருந்து சனிக்கிழமை காலை சேலம் புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்ததும் பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கினா். ஆனால், மூதாட்டி யசோதா மட்டும் பேருந்தில் இருந்து இறங்கவில்லை. அவா் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்த நடத்துநா் யசோதாவை எழுப்பினாா். அப்போது யசோதா இறந்தது கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பள்ளப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் நெப்போலியன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று யசோதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பயணத்தின்போது மூதாட்டி யசோதா உயிரிழந்ததை அறிந்த போலீஸாா் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com