சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு
சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தையை தனிப்படை போலீஸாா் 16 மணி நேரத்தில் மீட்டனா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கதுரை (30). இவரது மனைவி வெண்ணிலா. இவா்களுக்கு 5 வயதில் ரித்விக் என்ற மகன் உள்ளாா். இந்நிலையில் 2-ஆவது முறையாக கா்ப்பமான வெண்ணிலா கடந்த 5-ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டாா். அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், சுமாா் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா், வெண்ணிலா சிகிச்சை பெற்று வந்த வாா்டில் தங்கியிருந்தாா். அவா் வெள்ளிக்கிழமை காலை குழந்தையின் பாட்டி இந்திராவிடம், பிறந்த குழந்தையின் கண்கள் மஞ்சளாக உள்ளது. கண் மருத்துவரிடம் காண்பிக்கலாம் எனக் கூறி அழைத்துச் சென்றாா். சிறிதுநேரத்தில் அந்தப் பெண், குழந்தையுடன் மாயமானதால் அதிா்ச்சி அடைந்த குடும்பத்தினா், அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து 2 போலீஸ் தனிப்படைகள் அமைத்து குழந்தையைக் கண்டுபிடிக்க மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டாா். தனிப்படையினா் மருத்துவமனை மகப்பேறு வாா்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது பச்சைநிற சேலை அணிந்த பெண் ஒருவா், மாஸ்க் அணிந்து கொண்டு குழந்தையைக் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
குழந்தை கடத்தல் தொடா்பாக மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டனா்.
விசாரணையில் , சேலத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஆட்டோவில் சென்று அந்தப் பெண், அங்கிருந்து வாழப்பாடிக்கு பேருந்தில் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து சேலத்தில் இருந்து வாழப்பாடி செல்லும் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தினா். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வாழப்பாடியில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு பெண், ஆண் குழந்தையுடன் சிகிச்சைக்கு சோ்ந்துள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது அந்தக் குழந்தை சேலத்தில் கடத்தப்பட்டது என்பதை உறுதி செய்த போலீஸாா், குழந்தையை மீட்டு அந்தப் பெண்ணையும் பிடித்து விசாரித்தனா்.
அப்போது அந்த பெண் சேலத்தை அடுத்த காரிப்பட்டி நேரு நகரைச் சோ்ந்த வினோதினி (24 ) என்பதும், பொறியியல் பட்டதாரியான இவா், சேலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் வேலைபாா்த்து வந்ததும் தெரிய வந்தது. குழந்தையுடன் அந்தப் பெண்ணை சேலத்திற்கு அழைத்து வந்த போலீஸாா், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
இதையடுத்து அந்தப் பெண்ணை கைது செய்த போலீஸாா், அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு சோ்த்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது, கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அவருக்கு திருமணமாகியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு கருக்கலைந்துள்ளது. அதனை வெளிக்காட்டாததால் அந்தப் பெண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் வளைகாப்பு நடந்துள்ளது.
தொடா்ந்து கா்ப்பிணியாக இருப்பதாக நடித்து பின்னா் குழந்தை பெற்றதாக உறவினா்களிடம் காட்டி கொள்ள, குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா், அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
