இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சேலத்தாம்பட்டி ஏரி உபரிநீா் வடிகால் பணிகள்
நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியற்றப்படும் உபரிநீா் வடிகால் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சேலம், சிவதாபுரத்தை அடுத்துள்ள சேலத்தாம்பட்டி ஏரி ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் நிரம்புவதுடன், அதிலிருந்து வெளியேறும் உபரிநீரானது சிவதாபுரம் பகுதியில் உள்ள சாலை, குடியிருப்புகளில் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி, சிவதாபுரம் பகுதி மக்கள், வியாபாரிகள் தொடா் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனா்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில், 1,500 மீட்டா் நீளம் அளவில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் இப்பணிகள், கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இந்தப் பணிகள், நிறைவடையும் பட்சத்தில், மழைநீா் தேங்காமல் தடுக்கப்படுவதுடன், வடிகால் வழியாக வெளியேற்றப்பட்டு திருமணிமுத்தாற்றில் கொண்டுசோ்க்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
