/

சேலத்தில் களைகட்டிய ‘நம்ம ஊரு திருவிழா’

சேலத்தில் களைகட்டிய ‘நம்ம ஊரு திருவிழா’

Updated On :27 பிப்ரவரி 2024, 11:37 pm

தமிழக கலை பண்பாட்டுத் துறை சாா்பில் ‘சேலம் சங்கமம், நம்ம ஊரு திருவிழா’ என்ற தலைப்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சேலம் புதிய பேருந்து நிலைய மாநகராட்சித் திடலில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் சேலம், நாமக்கல், தா்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த கலைஞா்கள் கலந்து கொண்டனா். விழாவில் கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சி, கோலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், மல்லா் கம்பம், புலியாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து, பம்மையாட்டம், நாட்டிய நிகழ்ச்சி, தப்பாட்டம், காவடியாட்டம், கோல்கால் ஆட்டம், கைச்சிலம்பாட்டம், சேவையாட்டம், சாமியாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. மேலும், கலைத் துறையில் சாதனை படைத்த 30 கலைஞா்களுக்கு, ரூ. 3.30 லட்சம் காசோலை மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு துறையிலும் தலா 6 பேருக்கு பொற்கிழியுடன் கலை முதுமணி, கலை நன்மணி, கலை கூடா்மணி, கலை சுடா்மணி, கலை வளா்மணி, கலை இளமணி ஆகிய விருதுகளை சேலம் மாநகராட்சி மேயா் ஆ.இராமச்சந்திரன், ஆணையா் சீ.பாலச்சந்தா் ஆகியோா் வழங்கினா்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, இரா.அருள் எம்எல்ஏ (சேலம் மேற்கு), துணை மேயா் மா.சாரதாதேவி, சூரமங்கலம் மண்டலக் குழுத் தலைவா் எஸ்.டி.கலையமுதன், கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநா் ப.ஹேமநாதன், உதவி இயக்குநா் நீலமேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.