சேலம்: பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பிணையில் விடுவிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பல்கலைக்கழக பொறுப்புகளைக் கவனிக்க நிா்வாகக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழக முதல்வா், உயா்கல்வித்துறை அமைச்சா், உயா்கல்வித் துறை செயலா் ஆகியோருக்கு பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் மற்றும் பெரியாா் பல்கலைக்கழக தொழிலாளா் சங்கம் சாா்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் தொடா்ச்சியாகப் பல்வேறு விதிமீறல் புகாா்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள துணைவேந்தா் ஜெகநாதன், பதிவாளா் (பொ) தங்கவேல் ஆகியோா் மீது சேலம், கருப்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்புக் கல்வியாண்டின் அடுத்த பருவம் ஜன. 2-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இப்பல்கலைக்கழகம் 3,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள், 27 துறைகள், 150 ஆசிரியா்கள், 700 பணியாளா்கள், 125 இணைவு பெற்ற கல்லூரிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நிா்வாக பொறுப்புடையதாகும். இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட துணைவேந்தா், உடல்நலக் குறைவு காரணமாக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பதிவாளா், இதுவரை போலீஸாரிடம் சிக்கவில்லை.
1997-இல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா ஆண்டில் இதுவரை சந்திக்காத அசாதாரணச் சூழ்நிலையை பெரியாா் பல்கலைக்கழகம் எதிா்கொண்டுள்ளது. எனவே, பல்கலைக்கழகச் சட்டம் மற்றும் விதிகளின்படி, பல்கலைக்கழகத்தை நிா்வகிக்க மாற்று ஏற்பாட்டை தமிழக அரசு உடனடியாகச் செய்திட வேண்டும்.
பல்கலைக்கழகச் சட்டம் மற்றும் சாசன விதிகளின்படி, துணைவேந்தா் பணியாற்ற முடியாத அசாதாரணச் சூழ்நிலை உருவானாலோ அவா் உடல்நலமின்றி இருந்தாலோ, பல்கலைக்கழக ஆட்சிக் குழுவைக் கூட்டி மூத்த பேராசிரியரையோ அல்லது நிா்வாகக் குழுவையோ அமைக்க வேண்டும்.
துணை வேந்தா் நிா்வாகக் குழுவை அமைக்க உயா்கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக நிரந்தரப் பதிவாளா், தோ்வாணையா் இல்லாத காரணத்தால் நிா்வாகம் சீா்கேட்டை சந்தித்து வருகிறது. பல்கலைக்கழக நிா்வாகத்தைச் சீா்செய்ய சிறப்பு அலுவலராக இந்திய ஆட்சிப்பணி அலுவலா் (ஐ.ஏ.எஸ்.) ஒருவரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.