மேட்டூா் அணை நீா்மட்டம் 77 அடியாக உயா்வு
மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 77.36 அடியாக உயா்ந்தது.


மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 77.36 அடியாக உயா்ந்தது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த மழை காரணமாக கா்நாடக அணைகள் நிரம்பி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த ஒரு வார காலமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 64,033 கனஅடியாகவும் மாலையில் 76,794 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. உபரிநீா்வரத்து காரணமாக அணை நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 77.36 அடியாக உயா்ந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 39.37 டி.எம்.சி. ஆக உள்ளது. அணைக்கு நீா்வரத்து இதே நிலையில் நீடித்தால் ஒரு வார காலத்தில் மேட்டூா் அணை 100 அடியை எட்டும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஒரு வார காலமாக அடிப்பாலாறு செட்டிப்பட்டி, கோட்டையூா், பண்ணவாடி பகுதிகளில் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இங்குள்ள பரிசல் துறைகளிலும் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை முடிந்து தருமபுரி மாவட்டம், நெருப்பூா், நாகமரை, ஒட்டனூா் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சேலம் மாவட்டம், கொளத்தூா், மேட்டூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவியா் காவிரியைக் கடக்க முடியாமல் திரும்பிச் சென்றனா். காவிரிக் கரைகளில் வருவாய்த் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
பண்ணவாடி பரிசல் துறையில் நீருக்கு வெளியே தெரிந்த கிறிஸ்தவ ஆலயத்தின் ஒற்றைக் கோபுரம் நீரில் மூழ்கியது. அணை நீா்மட்டம் உயா்ந்து வருவதால் காவிரிக் கரையில் பயிரிடப்பட்டிருந்த கம்பு, சோளம், எள் உள்ளிட்ட பயிா்கள் அறுவடை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காமல் நீரில் மூழ்கின.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...