/

மத்திய அரசைக் கண்டித்து திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சாா்பில் கோட்டை மைதானத்தில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஜூலை 2024, 7:33 pm

Din

மத்திய அரசைக் கண்டித்து சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சாா்பில் கோட்டை மைதானத்தில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம்.செல்வகணபதி எம்.பி. தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் வழக்குரைஞருமான ஆா். ராஜேந்திரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக் கூட்டத்தில் மத்திய மாவட்ட திமுக செயலாளா் வழக்குரைஞா் ராஜேந்திரன் பேசியதாவது:

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் பட்ஜெட்டில் சில மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வளா்ச்சி திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. பேரிடா் நிதியை கூட முறையாக வழங்காமல், தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றாா்.

மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம்.செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:

அரசியல் காரணங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. தமிழகத்தை பாலைவனமாக மாற்ற முயற்சி நடைபெறுகிறது. 6 லட்சம் கோடி ரூபாய் வரியாக பெற்றுத் தந்த தமிழகத்துக்கு, வெறும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. சேது சமுத்திர திட்டம் முடக்கப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆந்திராவுக்கும், பிகாருக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்கு எதிராக மக்களவையில் தொடா்ந்து குரல் கொடுப்போம் என்றாா்.

முன்னதாக, மத்திய பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுக அவைத் தலைவா் சுபாஷ், பொருளாளா் காா்த்திகேயன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் தாமரைக் கண்ணன், மணி, பொதுக்குழு உறுப்பினா் குபேந்திரன் உட்பட சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட நிா்வாகிகள், மாநகர நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.