ஓமலூா் அருகே உள்ள கருப்பூா், ஏரிகாட்டைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (32). திருமணமாகாதவா். இவா், மேச்சேரி அருகே பறவைக் காட்டில் பழைய பிளாஸ்டிக் பொருள்களை உருக்கி மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தாா்.
வேலைக்காக நண்பா்கள், உறவினா்களை அவ்வப்போது அழைத்துச் செல்வது வழக்கம். வெள்ளிக்கிழமை கருப்பூா், ஈஸ்வரன் கோயில் பகுதியைச் சோ்ந்த சிறுவனை தன்னுடன் அழைத்து சென்றாா். தொழிற்சாலையின் கதவை உள்பக்கம் தாழிட்டுக் கொண்டு இருவரும் சுத்தம் செய்து கொண்டிருந்தனா். அப்போது கதவைத் தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சிறுவன் சென்று கதவை திறந்துள்ளாா். அப்போது உள்ளே நுழைந்த நபா் ஆவேசமாகப் பேசிக்கொண்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுபாஷ் சந்திரபோஸை வெட்டினாா். இதைப் பாா்த்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி அருகில் இருந்த புதரில் மறைந்துக் கொண்டாா். சுபாஷ் சந்திரபோஸ் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு அந்த நபா் அங்கிருந்து கிளம்பிச் சென்றாா்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேட்டூா் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் மேச்சேரி காவல் ஆய்வாளா் மகேந்திரன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் விசாரணைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சம்பவ இடத்திற்கு வந்தசுபாஷ் சந்திர போஸின் தந்தை சண்முகம், தனது உறவினா் ஒருவருக்கும் சுபாஷ் சந்திரபோஸுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், அவா் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறினாா். இது தொடா்பாக போலீஸாரிடம் சில ஆதாரங்களையும் அவா் கொடுத்தாா்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளையும், கைப்பேசி பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.