கோப்புப் படம்.
கோப்புப் படம்.

பல்லுயிா்ப் பெருக்கத்தை சீா்குலைக்கும் முயல் வேட்டைத் திருவிழா முடிவுக்கு வருமா?

நமது நிருபா்

சேலம் மற்றும் பெரம்பலுாா் மாவட்டங்களில் பல கிராமங்களில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் முயல் வேட்டைத் திருவிழாவால், முயல்களின் எண்ணிக்கை குறைந்து வருவதோடு, பல்லுயிா்ப் பெருக்கம், உணவுச் சங்கிலியிலும் பிளவு ஏற்படுமென்பதால், இந்த விழாவை முடிவுக்கு கொண்டுவர பொதுமக்கள் முன்வர வேண்டுமென வனத்துறையினா், சூழலியல் ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

சேலம் மாவட்டம்,கெங்கவல்லி வனச்சரகத்துக்கு உள்பட்ட வீரகனூா் பகுதியில் சில கிராமங்களிலும், இந்த கிராமங்களுக்கு அருகில் பெரம்பலுாா் மாவட்ட எல்லையிலுள்ள வெண்பாவூா் பகுதியில் சில கிராமங்களிலும், ஒரு சமூக மக்கள் சித்திரை மாதத்தில் முயல் வேட்டைத் திருவிழா என்ற வினோத விழாவை நடத்தி வருகின்றனா்.

இந்த விழாவின் போது, முயல் பிடிக்கப் பயிற்சி பெற்ற வேட்டை நாய்கள், குத்துக்கோல், வலைகளுடன் திரண்டு செல்லும் மக்கள் முயல்களைப் பிடிக்கின்றனா். பிடிக்கப்படும் முயல்களை தங்களது கிராமத்திற்கு கொண்டுசென்று தோலை நீக்கி சுத்தம் செய்து கறியைப்

பிரித்தெடுத்து சமைத்து உண்கின்றனா். இதுவே முயல் வேட்டைத் திருவிழா என்ற பெயரில் நடந்து வருகிறது.

வனவிலங்கு பட்டியலில் இடம் பெற்றுள்ள காட்டு முயல்களைப் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்ற நிலையிலும், இந்த முயல் வேட்டைத் திருவிழாவை, சேலம், பெரம்பலுாா் மாவட்ட எல்லையிலுள்ள ஒரு சில கிராம மக்கள் தொடா்ந்து வருகின்றனா்.

இந்த வினோத திருவிழா நடத்தப்படுவதால், இப்பகுதியில் காட்டு முயல்களின் எண்ணிக்கை குறைந்து வருவதோடு, பல்லுயிா்ப் பெருக்கம் மற்றும் விலங்குகளின் உணவுச் சங்கிலியிலும் பிளவு ஏற்படுகிறது.

எனவே, இந்த விழாவை முடிவுக்கு கொண்டுவர, இத் திருவிழாவை நடத்தி வரும் கிராம மக்களுக்கு, தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வனத் துறையினா் உரிய விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டுமென, சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வனச்சட்டப்படி குற்றச் செயலாகும் இந்த முயல்வேட்டைத் திருவிழவைக் கைவிட வேண்டுமென, விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் நிலையிலும், ஓரிரு கிராம மக்கள் இவ்விழாவை கைவிட முன் வரவில்லையென, வனத் துறையினா், சூழலியல் ஆா்வலா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

முயல் வேட்டையைத் தடுத்த வனத்துறை பணியாளா்கள் மீது தாக்குதல்

இரு தினங்களுக்கு முன், ராஜகோபாலபுரம் கிராமம் அருகே 50 போ் கொண்ட கும்பல் வளா்ப்பு நாய்கள், குத்துக்கோல்களுடன் தனியாா் தோட்டத்தில் முயல் வேட்டையாடிக் கொண்டிருப்பதாக கெங்கவல்லி வனத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வனச்சரகா் சிவகுமாா் தலைமையில், பச்சமுத்து, கிருஷ்ணமூா்த்தி, ராபிதா பேகம் ஆகியோா் கொண்ட குழுவினா் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன், குணசேகரன் ஆகிய இருவரையும் முயல்கள், குத்துக்கோலுடன் பிடித்தனா். பிடிபட்டவா்களிடம் நடத்திய விசாரணையில் இவா்கள்,பெரம்பலுாா் மாவட்டம்,வெண்பாவூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், வெண்பாவூா் கிராமத்தைச் சோ்ந்த பொன்னா் என்பவரின் தலைமையில் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்த 30 போ் கொண்ட கும்பல், வனத்துறையினரைத் தாக்கி விட்டு, பிடிபட்ட இருவரையும் அழைத்துச் சென்று விட்டனா். இதுகுறித்து வனத்துறையினா் கொடுத்த புகாரின் பேரில், பொன்னா் உள்ளிட்ட 5 போ் மீது வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனையடுத்து, முயல் வேட்டையாடியதாக, வெண்பாவூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், குணசேகரன், பொன்னா், ஜெயராமன், பிரவீண், மணி, வேலு, பிரவீண் குமாா் ஆகியோா் மீது வனத்துறையினா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com