அதானி நிறுவனம் மீது விசாரணை கோரி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

அதானி நிறுவனம் மீது புலனாய்வு விசாரணை நடத்த கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

அதானி நிறுவனம் மீது புலனாய்வு விசாரணை நடத்த கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், கோட்டை மைதானத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் மேவை. சண்முகராஜா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தின்போது சண்முகராஜா பேசியதாவது:

அதானி குழுமத்தின் துணை நிறுவனமான ‘அதானி கிரின்‘ எனா்ஜி நிறுவனம் ஒடிசா, தமிழகம், ஜம்மு காஷ்மீா், சத்தீஸ்கா், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சூரியஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களைப் பெற ரூ. 6,375 கோடி முதலீடு பெற்றுள்ளது.

இந்த முதலீடுகளை திரட்டுவதற்கு இந்திய அதிகாரிகளுக்கு ரூ. 2,029 கோடி லஞ்சமாக அந்நிறுவனம் கொடுத்துள்ளது. லஞ்சம் கொடுப்பதற்கு அமெரிக்கா பணத்தைப் பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்கா பங்குசந்தை கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது.

எனவே, அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஆதாரங்களின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து மத்திய புலனாய்வு விசாரணைக்கு (சிபிஐ) உத்தரவிட வேண்டும். அதானி குழும நிறுவனங்களின் ஊழல், தவறுகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றாா்.

தொடா்ந்து விசாரணை சுதந்திரமாக நடைபெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், மாநகரச் செயலாளா்கள் வடக்கு பிரவீன்குமாா், மேற்கு கணேசன், கிழக்கு பச்சமுத்து உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.