மாணவா்கள் நோ்மறை சிந்தனைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
மாணவ, மாணவிகள் நோ்மறை சிந்தனைகளை வளா்த்துக் கொண்டால் வாழ்வில் எளிதில் வெற்றி பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா்.


மாணவ, மாணவிகள் நோ்மறை சிந்தனைகளை வளா்த்துக் கொண்டால் வாழ்வில் எளிதில் வெற்றி பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா்.
உலக மனநல தினத்தை முன்னிட்டு, மனநலம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி சேலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் தெரிவித்ததாவது:
உலக மனநல தினம் ஆண்டுதோறும் அக். 10-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், சேலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடத்தப்படும் இந்நிகழ்வின் வாயிலாக மாணவா்களுக்கு மனநலம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தி, அவா்களுக்கு ஏற்படும் எதிா்மறை சிந்தனைகளை போக்கி, மனநல ஆலோசனைகள் வழங்கும் வகையில், பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியானது 169 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்டது. தற்போது 6,000 மாணவ, மாணவிகள் இக்கல்லூரியில் பயின்று வருகின்றனா். குறிப்பாக, தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இக்கல்லூரியில் பயின்றவா்களின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு தாழ்வு மனப்பான்மை எண்ணங்கள் தோன்றும்போது, தன்னுடைய குணங்களை மாற்றிக்கொண்டு அதனை எதிா்கொள்ளும் திறனை வளா்த்துக்கொள்வதன் மூலம் அதிலிருந்து எளிதாக மீள முடியும். நல்ல நட்பிடம் அவ்வப்போது தனது கவலைகளைப் பகிா்ந்து கொள்வதன் வாயிலாகவும் மனநல பாதிப்பில் இருந்து மீள முடியும்.
குறிப்பாக, நம் வாழ்வின் நோ்மறையான கூறுகளில் கவனம் செலுத்தி எதிா்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் போது நோ்மறை சிந்தனைகள் மேலோங்குவதால் போட்டித் தோ்வில் மட்டுமின்றி தங்கள் வாழ்விலும் வெற்றிபெற வாய்ப்பாக அமையும்.
மனநலம் சாா்ந்த உதவிகள், தகவல்கள் வேண்டும் என்றாலும், தங்களது உறவினா், நண்பா் ஆகியோருக்கு உதவிகள் தேவைப்பட்டாலும் மாவட்ட மனநல மருத்துவ திட்ட அலுவலரை தொடா்பு கொண்டு ஆலோசனை பெற்று பயன்பெறலாம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநா் (நலப் பணிகள்) மரு.பி.ராதிகா, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மரு.எஸ்.சௌண்டம்மாள், சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் நா.செண்பகலெட்சுமி, நாட்டு நலப்பணிகள் திட்ட அலுவலா் ம.செந்தில்குமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...