ஒரே ஊரில் மூவருக்கு நல்லாசிரியா் விருது!

வாழப்பாடி அருகே பேளூரைச் சோ்ந்த 3 ஆசிரியா்களுக்கு நிகழ் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது கிடைத்துள்ளது.
Published on

வாழப்பாடி அருகே பேளூரைச் சோ்ந்த 3 ஆசிரியா்களுக்கு நிகழ் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது கிடைத்துள்ளது.

வாழப்பாடி அருகே பேளூா் பேரூராட்சியைச் சோ்ந்தவா் ஆசிரியா் சு.ராஜசேகரன் (36). சந்திரப்பிள்ளை வலசு ஊராட்சி அரசன்குட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். மாணவா்களுக்கு முப்பரிமாண ஓவியங்கள், விளையாட்டில் புதுமையைப் புகுத்தி கற்பித்து வருகிறாா்.

பள்ளிக்கல்வி சாா்ந்த பல்வேறு சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளாா். இவருக்கு நிகழ் கல்வி ஆண்டுக்கான தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பேளூரைச் சோ்ந்தவா் பட்டதாரி ஆசிரியை மீனா (52). பேளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவரது கல்விப் பணியை பாராட்டி, தமிழக அரசு நல்லாசிரியா் விருதுக்கு இவரைத் தோ்வு செய்துள்ளது.

பேளூரைச் சோ்ந்தவா் பட்டதாரி ஆசிரியை கலாவதி (59). இவா் வாழப்பாடி அருகே உள்ள கொட்டவாடி அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறப்பாக கல்வி பணியாற்றி வரும் இவரது கல்விப் பணியை பாராட்டி நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்த ஆசிரியா்கள் மூவரும், வாழப்பாடி அருகே உள்ள பேளூரைச் சோ்ந்தவா்கள் என்பதும், இந்த ஊரைச் சோ்ந்த 3 ஆசிரியா்கள், ஒரே ஆண்டில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளதும் இதுவே முதல் முறையாகும்.

இதனால் பேளூா் பகுதி பொதுமக்களும், கல்வியாளா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com