திருவண்ணாமலை தீபம்: பாதுகாப்பு பணிக்கு சென்ற 600 போலீஸாா்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, பாதுகாப்பு பணிக்காக சேலத்தில் இருந்து 600 போலீஸாா் திருவண்ணாமலை சென்றுள்ளனா்.
Published on

சேலம்: திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, பாதுகாப்பு பணிக்காக சேலத்தில் இருந்து 600 போலீஸாா் திருவண்ணாமலை சென்றுள்ளனா்.

புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மலையில் மகா தீபம் ஏற்றும் விழா வரும் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனா்.

இதன் காரணமாக, அண்ணாமலையாா் கோயில் பகுதி, கிரிவல பாதை, நகா் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக சேலம் மாவட்ட காவல் துறையில் இருந்து காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், 5 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 10 காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள் உள்பட 300 போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் சென்றனா்.

இதேபோல, சேலம் மாநகர காவல் துறையில் இருந்து துணை ஆணையா்கள் கீதா.சிவராமன் தலைமையில் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் போக்குவரத்து போலீஸாா் என 300 போ் திருவண்ணாமலை சென்றுள்ளனா். இவா்கள் வரும் 5-ஆம் தேதிவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com