நெற்பயிரில் புகையான் பூச்சிவராமல் தடுக்க ஆலோசனை
சங்ககிரி: நெற்பயிரில் புகையான் பூச்சிவராமல் எவ்வாறு தடுப்பது என்பதற்கான வழிமுறைகள் குறித்து சங்ககிரி வேளாண் உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து சங்ககிரி வேளாண் உதவி இயக்குநா் வி.விமலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சங்ககிரி வட்டம், தேவூா் உள்வட்ட பகுதியில் தொடா்ந்து மழை பெய்துவருவதால், நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பூக்கும் தருவாயில் உள்ள பயிரில் புகையான் பூச்சித்தாக்குதல் அதிகரிக்கக் கூடிய குளிா்ச்சியான காலநிலை தற்போது நிலவி வருகிறது.
எனவே, விவசாயிகள் நெல் வயலுக்கு வேப்பம் புண்ணாக்கு அடியுரமாக இட வேண்டும். அடா்நடவு செய்வதை தவிா்த்து, 5 அடிக்கு ஓா் அடி இடைவெளிவிட்டு பயிா் நடவுசெய்ய வேண்டும். தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதை தவிா்க்க வேண்டும். வயலில் அளவுக்கு அதிகமாக தண்ணீா் தேங்குவதை தவிா்க்க வேண்டும். வரப்பு ஓரங்களில் உள்ள தூா்களின் அடிப்பாகத்தை விளக்கி புகையான் பூச்சித்தாக்குதல் உள்ளதா என அடிக்கடி ஆய்வுசெய்ய வேண்டும்.
பயிரின் அடிப்பாகத்தில் புகையான் பூச்சிகளின் எண்ணிக்கை பொருளாதார சேதநிலையை அதிகரிக்கும்பட்சத்தில், 10 லிட்டருக்கு 150 மில்லி வேப்ப எண்ணெய், காதி சோப் அல்லது ரசாயன பூச்சிமருந்தான எத்திபுரோல் 10 சதவீதம் அல்லது பைபெட்ரோசின் 50 சதவீதம் அல்லது பியூப்ரோபேசிக் 5 சதவீதம் அல்லது இமிடாகுளோப்பி3 17.8 சதவீதம் ஓா் ஏக்கருக்கு 100 மில்லி பூச்சிமருந்துடன் சிலிகாஜெல் என்ற ஓட்டும் பசை கலந்து நெற்பயிரின் அடிப்பாகத்தில் உள்ள புகையான் பூச்சி நனையுமாறு விசைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். மேலும், விளக்குப்பொறி அல்லது இனக்கவா்ச்சி பொறியை ஏக்கருக்கு 2 வீதம் முன்னிரவு நேரத்தில் வைத்து அந்தப் பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
