மேட்டூா் அணை உபரி நீரை வட நீா்நிலைகளில் நிரப்ப கோரிக்கை
மேட்டூா் அணை உபரிநீரை கொளத்தூா் ஒன்றியத்தில் உள்ள நீா்நிலைகளில் நிரப்ப விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொளத்தூரில் மேட்டூா் அணை உபரிநீா் வேண்டுவோா் விவசாய நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவராக நாகராஜன், செயலாளராக காா்த்திகேயன், பொருளாளராக ஜெயபிரகாஷ், துணைத் தலைவா்களாக ராஜேந்திரன், நாச்சிமுத்து, சிவகுமாா் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் நிா்வாகப் பொறுப்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இக்கூட்டத்தில் கொளத்தூா் ஊராட்சி ஒன்றிய மேட்டூா் அணை உபரி நீா் வேண்டுவோா் விவசாயிகள் நலச்சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்துவது, மேட்டூா் அணை நிரம்பி வெளியேற்றப்படும் உபரிநீரை கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள வட ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஓடைகள், தடுப்பு அணைகள், கசிவுநீா் குட்டைகளில் நிரப்புதல் உள்ளிட்ட 8 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேட்டூா் அணை உபரிநீரை நீரேற்றுத் திட்ட மூலம் கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் 40 ஏரிகளுக்கு நிரப்புவதன் மூலம் சேலம் மாவட்டம் மட்டுமில்லாமல் ஈரோடு மாவட்டம், அந்தியூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளும் பயனடைவாா்கள் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.
