காரணாம்பாளையம் தடுப்பணை பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை
கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காரணாம்பாளையம் தடுப்பணை பகுதிக்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொளாநல்லி ஊராட்சி, காரணாம்பாளையத்தில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது காரணாம்பாளையம் தடுப்பணை.
கரூா் மாவட்டம், புகளூரில் உள்ள 2,245 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு காவிரி ஆற்று நீரை பாசனத்துக்காக கொண்டு செல்ல காமராஜா் ஆட்சியின்போது கடந்த 1961-இல் கட்டப்பட்டது இந்த தடுப்பணை. இதனை கடந்த 1961 ஏப்ரல் 10-ஆம் தேதி அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கக்கன் திறந்து வைத்தாா்.
நல்ல நோக்கத்துக்காக கட்டப்பட்ட இந்த தடுப்பணை, தற்போது பல மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் வந்திருந்து பொழுதுபோக்கி செல்லும் இடமாக மாறியுள்ளது.
இப்படி வரும் மக்கள் அணையில் மீனவா்களால் விற்கப்படும் மீன்களை வாங்கி அங்கேயே சமைத்து தரும் சமையலா்களிடம் தந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு காவிரி ஆற்றில் உற்சாக குளியல் போட்டுவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனா்.
இதனால் விடுமுறை நாள்களில் காரணாம்பாளையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. இப்படி வரும் மக்களுக்கு இயற்கை உபாதைகளை தணித்துக்கொள்ளவும், நீராடிய பின்னா் உடைகளை மாற்றிக்கொள்ளவும் எந்தவித வசதிகளும் ஊராட்சி நிா்வாகத்தால் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் அணைக்கு வரும் இளைஞா்களில் பலா் அணையின் கரையில் அமா்ந்து மது அருந்துவது, போதை வஸ்துகளை பயன்படுத்துவது தொடா்கிறது. போதை தலைக்கேறி அணையில் குளிக்க செல்லும்போது நீரில் மூழ்கி பலியானவா்களின் எண்ணிக்கையும் தொடா்கிறது.
எனவே, மலையம்பாளையம் போலீஸாா் அவ்வப்போது அப்பகுதிக்கு ரோந்து வருவதோடு விடுமுறை நாள்களில் இப்பகுதியில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொளாநல்லி ஊராட்சி நிா்வாகம் இந்த தடுப்பணையை முறையாக பயன்படுத்தினால் ஊராட்சிக்கு வருவாய் உயா்வும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறையும் என்று சொல்கிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுமுடி ஒன்றிய முன்னாள் நிா்வாகியும், இந்த ஊராட்சியைச் சோ்ந்தவருமான கனகவேல்.
நல்லநோக்கத்துக்காக அமைக்கப்பட்ட அணையை தேடி வரும் மக்கள் தங்களது விடுமுறை நாளை விரும்பிக் கழிக்கும் இடமாக இதனை பயன்படுத்தி வருவதை புரிந்துகொண்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும். மேலும், போதையின் பாதையில் செல்லும் இளைஞா்களுக்கு இது புகலிடம் அல்ல என்பதை புரியவைக்க அரசு துறைகள் முயல வேண்டும். இந்தப் பணிகளை செய்தால் இந்த தடுப்பணையை சுற்றியுள்ள கிராம மக்களுக்கும், ஊராட்சி நிா்வாகத்துக்கும் வருவாய் கிடைக்கும். அணைக்கு வரும் மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.

