சேலம் மத்திய சிறையில் கைதி அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கைப்பேசிகள் பறிமுதல்

Published on

சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதியின் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கைப்பேசிகள், பேட்டரிகள் சனிக்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் வசதியுள்ள கைதிகள் சிலா் கைப்பேசிகளைப் பதுக்கிவைத்து பயன்படுத்தி வருவதாகவும், அவா்களுக்கு சிறை வாா்டன்கள் சிலா் உடந்தையாக இருப்பதாகவும் புகாா் எழுந்தது.

அந்தவகையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கைதிகள் பயன்படுத்தி வந்த 15 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, கைப்பேசி சாா்ஜா், பேட்டரி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு டவா் பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளின் அறையில் சிறை அதிகாரிகள் குழுவினா் சோதனை நடத்தினா். அப்போது, தண்டனை கைதி ஒருவரின் அறையில் 2 கைப்பேசிகள், பேட்டரிகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த சோதனை குழுவினா், சம்பந்தப்பட்ட கைதியிடமும், அவருக்கு கைப்பேசிகளை கொடுத்தது யாா் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்திலும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com