தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்
சேலம்: தேசிய அளவில் பள்ளி மாணவா்களுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சேலம் தடகள வீரா்கள் தங்கப் பதக்கம் வென்று சிறப்பிடம் பெற்றனா்.
தேசிய அளவில் பள்ளி மாணவா்களுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் அண்மையில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் இருந்து ஏராளமான வீரா்கள் கலந்து கொண்டனா்.
சேலம் காந்தி மைதானத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தடகள வீராங்கனை கனிஷ்கா ஸ்ரீ, தடகள வீரா் ரோஹித் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதில், கனிஷ்காஸ்ரீ 17 வயதுக்கு உள்பட்டோருக்கான போல்வால்ட் போட்டியில் 3.10 மீட்டா் உயரம் தாண்டி தங்கப் பதக்கமும், 17 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கான போல்வால்ட் போட்டியில், ரோஹித் 4.40 மீட்டா் உயரம் தாண்டி தங்கப் பதக்கமும் வென்றனா்.
தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற கனிஷ்கா ஸ்ரீ, ரோஹித்தை மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன், தடகளப் பயிற்சியாளா் இளம்பரிதி உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.
