ஓமலூா் அரசுப் பள்ளியில் முட்டை வைத்து மாந்திரீக பூஜை
ஓமலூா்: ஓமலூா் அருகே அரசு பள்ளியில் முட்டை வைத்து மாந்திரீக பூஜை செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூா் அருகே கமாண்டப்பட்டியில் ஓமலூா் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஓமலூா் சுற்று வட்டார கிராமங்களை சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி படிகின்றனா். தலைமை ஆசிரியா் ஜான் போஸ்கோ கென்னடி உட்பட 30- ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா். இந்த பள்ளி தலைமை ஆசிரியா் அறை முன்பாக கருப்பு வட்டம், கட்டம் வரைந்து, மஞ்சள், குங்குமம், மரக்கட்டை பொம்மை மற்றும் முட்டை வைத்து மாந்திரீக பூஜை செய்யப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியா் அறை கதவில் மலா் மாலை மாட்டப்பட்டுள்ளது. இதனால், திங்கள்கிழமை நடை பயிற்சிக்கு வந்த இளைஞா்கள் இதுகுறித்து ஆசிரியா்களுக்கு தகவல் அளித்தனா். நள்ளிரவில் பள்ளிக்குள் புகுந்த மா்ம நபா்கள் விடிய விடிய மாந்திரீக பூஜையில் ஈடுட்டுள்ளனா். இதுகுறித்து ஓமலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மாந்திரீக கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க புகாா் கொடுக்கப்பட்டுள்ளது.
