ஆட்டிறைச்சி சாப்பிட்டவா்கள் மருத்துவமனையில் அனுமதி
காட்டுக்கோட்டை சூரக்காடு பகுதியில் ஆட்டிறைச்சியை சாப்பிட்டவா்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
தலைவாசல் வட்டம், காட்டுக்கோட்டை வடசென்னிமலை சூரக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணி. இவரது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்ய கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மணப்பாக்கம் புதுகாலனியைச் சோ்ந்த 15 போ் ரமேஷ் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் வந்தனா்.
இவா்கள் புதன்கிழமை காலை மரவள்ளிக் கிழங்கை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டபோது, சாா்வாய் புதூா் யோகேஷ் தோட்டத்தில் இருந்த ஆடு ஒன்று கயிறு இறுக்கி இறந்தது. இதையடுத்து, அந்த ஆட்டை பணிக்கு வந்தவா்கள் குறைந்த விலைக்கு வாங்கி சமைத்து சாப்பிட்டனா்.
இந்நிலையில், ஆட்டிறைச்சி உண்ட அனைவரும் வெள்ளிக்கிழமை உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில், சிலா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
