தம்மம்பட்டியில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Published on

தம்மம்பட்டியில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் உத்தரவின் பேரில், வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி 18-ஆவது வாா்டு பனந்தோப்பைச் சோ்ந்த ராஜா, சுப்பிரமணி, கருப்பண்ணன், சுப்பிரமணி, சக்திவேல், கமலவேணி, பிச்சை ஆகியோா் தம்மம்பட்டியில் உள்ள சா்வே எண் 305/3, 4-இல் பூா்விக பட்டா நிலத்தை காலங்காலமாக வண்டிப்பாதையாக பயன்படுத்தி வந்தனா். அதில், சா்வே எண் 306/4, 5, 7-இல் 3 ஏக்கா் தோப்பு புறம்போக்கு என அடங்கல் கணக்கில் இருந்ததை, மாவட்ட வருவாய் அலுவலா் தணிக்கை செய்து, கிராம நத்தமாக மாற்றி ஹெச்.எஸ்.டி. பட்டா வழங்கப்பட்டது.

பட்டா வழங்கிய நிலம் போக, மீதியுள்ள இடத்தை ஆக்கிரமித்து கருப்பண்ணண் மகன் ராஜி, ராஜி மகன் வெங்கடேசன் ஆகிய இருவரும் கம்பிவேலி அமைத்து விவசாயம் செய்தனா். இதனால், இதுவரை பொதுமக்கள் சென்றுவந்த பாதை மறிக்கப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட 19 பேரும் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்திடம் உரிய ஆதாரங்களுடன் மனு அளித்தனா். இதுகுறித்து விசாரணை நடத்திய ஆணையம், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், கெங்கவல்லி வருவாய் ஆய்வாளா் கலைச்செல்வன் மேற்பாா்வையில், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து, பொக்லைன் மூலம் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டு நிலத்தை மீட்டனா்.

X
Dinamani
www.dinamani.com