சேலம்- கொச்சி விமானம் திடீா் ரத்து: பயணிகள் அவதி
சேலத்தில் இருந்து கொச்சி செல்லும் விமானம் வியாழக்கிழமை திடீரென ரத்துசெய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
சேலம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, சேலம், கொச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கேரளத்தில் இருந்து சுற்றுலா வந்த 50-க்கும் மேற்பட்டோா் ஏற்காடு, சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், தாரமங்கலம் கைலாசநாதா் கோயில்களை பாா்த்துவிட்டு விமானம் மூலம் கேரளம் திரும்புவதற்காக ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தனா்.
இந்த நிலையில், சேலம் விமான நிலையத்துக்கு அனைவரும் வந்திருந்தனா். ஆனால், திடீரென கொச்சி விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பயணிகள் விமான நிலையத்திலே அமா்ந்திருந்தனா்.
திடீரென விமான ரத்து அறிவிப்பால் தங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்தனா். இந்த விமானம் அடிக்கடி ரத்து செய்யப்படுவதால் பழைய விமானத்தை நீக்கிவிட்டு, புதிய விமானத்தை இயக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

