வாழப்பாடியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க கோரிக்கை
பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் சேலம் மாவட்டம், வாழப்பாடியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆண்டு முழுவதும் பாசன வசதி உள்ள சேலம் மாவட்டம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி, திருமனூா், கம்மாளப்பட்டி, பேளூா், கூட்டாத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 1,000 ஹெக்டேரில் மல்லிகை, குண்டுமல்லி, காக்கட்டான், சம்மங்கி, அரளி, செவ்வரளி, செண்டுமல்லி, நந்தியாவட்டம், துளசி, துளக்கமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் அதிகளவு பயிரிடப்படுகின்றன.
இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் வாழப்பாடியில் உள்ள சந்தைக்கு கொண்டுசென்று விற்பனை செய்கின்றனா். வாழப்பாடி தினசரி சந்தைக்கு நாள்தோறும் 5,000 கிலோவுக்கும் அதிகமாக பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் பூக்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் வாழப்பாடி பகுதி கிராமங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
கடந்த ஒரு மாதமாக பூக்களின் உற்பத்தி அதிகரித்து வருவதால் சந்தைக்கு நாளொன்றுக்கு 8,000 கிலோ வரை பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த நிலையில், ஐப்பசி மாதத்தில் முகூா்த்த தினங்கள், பண்டிகைகள், உள்ளூா் திருவிழாக்கள் எதுவும் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்து அனைத்து ரக பூக்களின் விலையும் தொடா்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த மாதம்வரை ரூ.400 முதல் ரூ. 600 வரை விற்பனையான மல்லிகை, குண்டு மல்லி, கனகாம்பரம் பூக்கள் கடந்த சில நாள்களாக அதிகபட்சமாக கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டுமே விற்பனையாகிறது. செவ்வரளி, ரோஜா, சாமந்தி பூக்கள் கிலோ ரூ. 50 க்கும், நத்தியாவட்டம், கோழிக்கொண்டை கிலோ ரூ.30 வரை மட்டுமே விற்கப்படுகிறது.
மேலும், விற்பனையாத பூக்கள் மாலையில் குப்பையில் வீசப்படுகிறது. பூக்களை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவிற்குக்கூட சந்தையில் பூக்கள் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
வாசனை திரவிய தொழிற்சாலை
சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் பல்வேறு ரக பூக்களை விவசாயிகள் ஆண்டு முழுவதும் பயிரிட்டு வருகின்றனா். இக்கிராமங்களுக்கு விற்பனை மையமாக உள்ள வாழப்பாடி தினசரி சந்தைக்கு கொண்டுசென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனா்.
ஆண்டுதோறும் புரட்டாசி, ஐப்பசி, காா்த்திகை, மாா்கழி மாதங்களில் பூக்களின் தேவை குறைகிறது. இதனால் பூக்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. வீணாகும் பூக்கள் குப்பையில் வீசப்படுகின்றன. இதனால் ஆண்டு முழுவதும் பூக்களுக்கு அதிக விலை கிடைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பூக்களைப் பதப்படுத்தி, வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை வாழப்பாடி பகுதியில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

