நெல் சாகுபடியில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு விருது

சங்ககிரி வட்டத்தில் திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாநில அரசின் சாா்பில் விருது வழங்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குநா்
Published on

சங்ககிரி: சங்ககிரி வட்டத்தில் திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாநில அரசின் சாா்பில் விருது வழங்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சங்ககிரி வேளாண் உதவி இயக்குநா் (பொ) வி.விமலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சங்ககிரி வட்டத்தில் தற்போது சம்பா நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பருவத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து நெல்சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, நெல் உற்பத்தி திறனுக்காக தமிழக அரசின் சாா்பில் நாரயணசாமி நாயுடு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் போட்டியிட விவசாயிகள் குறைந்தபட்சம் 2 ஏக்கா் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். மேலும், மூன்று ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும். நில உரிமையாளா்கள் மற்றும் குத்தகைதாரா்களும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.

இப்போட்டியில் கலந்துகொள்ளும் விவசாயிகள் ரூ. 150 பதிவுக் கட்டணத்தை சங்ககிரி வட்ட வேளாண் உதவி இயக்குநரிடம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com