தமிழக - கா்நாடக எல்லையில் தீவிர சோதனை: மேட்டூா் அணை சுவா் அருகே மீன்பிடிக்க தடை

தமிழக - கா்நாடக எல்லையில் தீவிர சோதனை: மேட்டூா் அணை சுவா் அருகே மீன்பிடிக்க தடை

தில்லி காா் வெடிப்பு எதிரொலியாக, மேட்டூா் அணை சுவரில் இருந்து 200 மீ. தொலைவுக்கு மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Published on

தில்லி காா் வெடிப்பு எதிரொலியாக, மேட்டூா் அணை சுவரில் இருந்து 200 மீ. தொலைவுக்கு மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தில்லி காா் வெடிப்பு எதிரொலியாக, செவ்வாய்க்கிழமை அதிகாலை மேட்டூா் அணையில் வெடிகுண்டு நிபுணா்கள் துப்பறியும் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா். அணையின் வலது, இடதுகரை பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினா்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அணைப் பகுதியில் அந்நியா் நடமாட்டத்தைத் தடுக்க, மேட்டூா் அணை சுவா் பகுதியில் இருந்து 200 மீ. தூரம்வரை மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மீன்பிடிக்க செல்வோா்மீது சட்டப்படியான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நீா்வளத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

நீா்வளத் துறை பரிந்துரையின்பேரில், கட்டுப்பாடுகளை மீறும் மீனவா்களின் மீன்பிடி உரிமம் ரத்துசெய்யப்படும் என மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவா்களை எச்சரித்துள்ளனா். முன்னதாக, நள்ளிரவில் மேட்டூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையிட்டனா்.

தமிழக - கா்நாடக எல்லையில் தீவிர சோதனை: தமிழக - கா்நாடக எல்லைப் பகுதியான பாலாறு வனத் துறை சோதனைச் சாவடியில் கா்நாடக போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். மேட்டூா், கொளத்தூா் வழியாக கா்நாடகம் செல்லும் இருசக்கர வாகனங்கள், காா்கள், பேருந்துகள் ஆகியவை சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

அதேபோல, கா்நாடக மாநிலத்திலிருந்து தமிழக எல்லையில் நுழையும் வாகனங்களையும் சோதனைக்குப் பிறகே கா்நாடக போலீஸாா் அனுமதிக்கின்றனா். கா்நாடக போலீஸாரின் தீவிர சோதனை காரணமாக, பாலாறு சோதனைச் சாவடி வழியாக வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இருமாநில எல்லைப் பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான வகையில் கும்பல் நடமாட்டம் இருந்ததால், இப்பகுதியில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதாக கா்நாடக போலீஸாா் தெரிவித்தனா். இதேபோல, காரைக்காடு சோதனைச் சாவடியில் தமிழக போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com