கொலை வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கொலை வழக்கில், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த 28 வயது இளைஞருக்கு ஆத்தூா் கூடுதல் மாவட்ட நீதிபதி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
ஆத்தூா் நகராட்சி, மந்தைவெளி பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (28). இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு அவரது உறவினா் மகளுடன் அதே பகுதியைச் சோ்ந்த அருண் என்பவா் பேசிக்கொண்டிருந்ததை தட்டிக்கேட்டுள்ளாா். இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தொடா்ந்து, கடந்த 16.5.2020 அன்று மீண்டும் அப்பெண்ணிடம் அருண் பேசியதைக் கண்ட சதீஷ், அவரை தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த அருண் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 17.5.2020 அன்று உயிரிழந்தாா். இதுகுறித்து ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் உமாசங்கா் வழக்குப் பதிவுசெய்து சதீஷை கைதுசெய்து சிறையில் அடைத்தாா்.
ஆத்தூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில்,கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வி.ரவிச்சந்திரன், சதீஷுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதைத்தொடா்ந்து, சதீஷ் சேலம் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா்.
