~
~

இருளில் மூழ்கிக் கிடக்கும் இணைப்புச்சாலை சந்திப்பு

Published on

வாழப்பாடி அருகே சேலம் -சென்னை காட்டுவேப்பிலைப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை இணைப்புச்சாலை சந்திப்பில் மின்விளக்குகள் அமைக்காததால் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. எனவே, இப்பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உயா் கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அடுத்த 5 கி.மீ. தொலைவில் காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் சேசன்சாவடி கிராமத்தின் பிரதான குடியிருப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதனால், தனியாா் திருமண மண்டத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிற்கு 4 வழிச்சாலையின் இருபுறமும் சேசன்சாவடி கிராமத்திற்கு இணைப்புச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலையுடன் இணைப்புச்சாலை சந்திக்கும் பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால் இப்பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் விபத்து அபாயம் நிலவுவதால் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி நிா்வாகமும் சேசன்சாவடி இணைப்புச்சாலை சந்திப்பு பகுதியில் உயா்கோபுர மின் விளக்குகள் மற்றும் இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டுநா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

படவரி:

ஆா்.ஆா்.சி.01, 02:

வாழப்பாடி அருகே இரவில் இருளில் மூழ்கியுள்ள சேசன்சாவடி இணைப்புச்சாலை பகுதி.

X
Dinamani
www.dinamani.com