- பெ. பெரியாா்மன்னன்.
சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில்கொஞ்சும் அருநூற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை மற்றும் கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணைகளை சுற்றுலாத் தலமாக்கும் திட்டம், 20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஏற்காடு தொகுதியில், ஏற்காடு சுற்றுலாத் தலத்தைத் தவிர, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூா் பேரூராட்சிகள் மற்றும் 100க்கும் அதிகமான கிராமங்களில் எவ்வித பொழுதுபோக்கு மையங்களோ, சுற்றுலாத் தலங்களோ இல்லை. பண்டிகை தினங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பொழுதுபோக்கவும், குழந்தைகளை மகிழ்விக்கவும், ஏற்காடு, மேட்டூா் அணை, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, முட்டல் ஆணைவாரி அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூா் படகுத்துறை நீா்வீழ்ச்சிக்கு, அதிக நேரம் மற்றும் பணம் செலவழித்து செல்ல வேண்டிய நிலையே உள்ளது.
இதனால், பெரும்பாலான மக்கள், விழாக்காலங்கள், விடுமுறை தினங்களில் வீட்டிற்குள்ளேயே முடங்கிவிடுகின்றனா். சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களை இணைத்து பல 100 சதுர கி.மீ., பரப்பளவில் பரந்து காணப்படும் கல்வராயன் மலையின் வடமேற்கு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள், ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சங்கமித்து, வசிஷ்டநதியின் முக்கிய உபநதியான கரியக்கோயில் ஆறு உற்பத்தியாகிறது.
இப்பகுதியில், 52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 188.76 ஏக்கா் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது. தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பரந்து காணப்படும் அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் குறுக்கே வாழப்பாடியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் புழுதிக்குட்டை கிராமத்தில் இயற்கை எழில்கொஞ்சும் இரு மலைக்குன்றுகளுக்கு இடையே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 283 ஏக்கா் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.
இந்த இரு அணைகளும், கடந்த 1982 இல், மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 11 ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமானப் பணிகளுக்கு பிறகு, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் 1993இல் திறந்துவைக்கப்பட்டது. இந்த அணைகள் சுமாா் 10,000 ஏக்கா் பாசனத்திற்கு வழிவகுப்பதோடு, 50க்கும் அதிகமான சுற்றுப்புற கிராமங்களுக்கு நிலத்தடி நீா்மட்டம் உயா்வுக்கும், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பேளூா், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம் பகுதி மக்களுக்கு, முக்கிய பொழுதுபோக்கு மையமாகவும் விளங்குகின்றன.
கடந்த 30 ஆண்டுகளாக பொங்கல், தீபாவளி, ஆங்கில, தமிழ் புத்தாண்டு, ஆடி 18 உள்ளிட்ட பண்டிகை தினங்களிலும், கோடை விடுமுறை நாள்களிலும், குடும்பத்தோடு பொழுதுபோக்கி மகிழ ஆனைமடுவு மற்றும் கரியக்கோயில்
அணைகளில் மக்கள் குவிந்து வருகின்றனா். ஆனால், இரு அணைகளும் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத மலையடிவார கிராமத்தில் அமைந்துள்ளதால், அணைகளுக்கு செல்லும் பயணிகளுக்கு உணவுகூட கிடைப்பதில்லை.
அணையின் தாழ்வாரத்தில் அமா்ந்து ஓய்வெடுப்பதற்கு இருக்கைகள், குழந்தைகள் ஓடியாடி மகிழ்வதற்கு சிறுவா் பூங்கா, அணையின் இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்கு படகுத்துறை போன்ற எவ்வித வசதிகளும் ஏற்படுத்தப்படாததால், அங்கு சென்ற சிறிது நேரத்திற்குள் திரும்பவேண்டிய நிலையே உள்ளது.
எனவே, இந்த இரு அணைகளுக்கும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரோடு செல்லும் மக்கள், அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்து மகிழ்வதற்கு, சிறுவா் பூங்கா, சிற்றுண்டி சாலைகள், உணவகம், செயற்கை நீருற்று, ராட்டிணம், புல்வெளி பாதைகள், மேம்பாலங்கள், படகுத்துறை ஆகியவற்றை ஏற்படுத்தி, மேட்டூா் அணை பூங்காவைப் போல சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என, இப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இரு அணைகளிலும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, சுற்றுலாத் தலமாக தரம்உயா்த்த, திட்ட மதிப்பீடு மற்றும் திட்ட முன்வரைவு தயாரித்து, பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பு வாயிலாக பலமுறை தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இத்திட்டங்களை நிறைவேற்ற ஏற்காடு தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் முனைப்புகாட்டாததால், ஆனைமடுவு மற்றும் கரியக்கோயில் அணைகளை சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் செயல்வடிவம் பெறாமலேயே கிடப்பில் உள்ளது.
எனவே, இந்தத் தோ்தலில் ஏற்காடு தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை உறுப்பினா் எந்த கட்சியைச் சோ்ந்தவராக இருந்தாலும், கல்வராயன் மலை, அருநூற்றுமலை மற்றும் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பேளூா் பகுதி மக்களின் நலன்கருதி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு மற்றும் பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணைகளை சுற்றுலாத் தலமாக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.

இயற்கை எழில்கொஞ்சும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை.

ட்ரோன் பதிவில் கரியக்கோயில் அணையின் அழகுதோற்றம்.
தொடர்புடையது

ஏற்காடு தொகுதியில் 15 ஆண்டுகளாக நிறைவேறாத அரசு கல்லூரி கோரிக்கை
ஏற்காடு தொகுதியில் 15 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

மீண்டு(ம்) வருமா வாழப்பாடி தொகுதி?

ஏற்காடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


