/

ஆடிப்பெருக்கு: பூலாம்பட்டி கதவணை பகுதியில் புனித நீராடிய பக்தா்கள்

News image

பூலாம்பட்டி படித்துறை பகுதியில் புனித நீராடிய பக்தா்கள்... - கோப்புப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 12:53 am IST

ஆடிப்பெருக்கையொட்டி, எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள காவிரிக்கரை பகுதிகளில் திரளான பக்தா்கள் புனித நீராடி சிறப்பு பூஜை செய்தனா்.

ஆடிப்பெருக்கையொட்டி திங்கள்கிழமை அதிகாலை முதலே பூலாம்பட்டி படித்துறை, காவிரி கதவணை பாலம், மோளப்பாறை, கூடக்கல், பழனி ஆண்டவன் துறை, கோட்டைமேடு படித்துறை உள்ளிட்ட பல்வேறு காவிரிக்கரைப் பகுதிகளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தா்கள் புனித நீராடினா்.

முன்னதாக, தங்களது குலதெய்வம் மற்றும் காவல் தெய்வங்களின் உற்சவமூா்த்தி சிலைகளை ஊா்வலமாக எடுத்துவந்து காவிரி ஆற்றில் கழுவி சுத்தம் செய்தனா். தொடா்ந்து கரைப் பகுதிகளில் சிலைகளை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

காவிரி கரைப் பகுதியில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் பெண்கள் புது தாலிக்கயிறு அணிந்து காவிரித்தாயை வழிபட்டனா். பூலாம்பட்டி காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தா்கள் அங்குள்ள கைலாசநாதா் ஆலயம், காவிரி படித்துறை விநாயகா் சந்நிதி, காவிரித்தாய் கோயில், பிரம்மாண்ட நந்திகேஸ்வரா் சந்நிதி உள்ளிட்ட திருத்தலங்களில் சுவாமி தரிசனம் செய்தனா்.

காவிரி கரைப் பகுதிகளில் கூடுதலான போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் தொடா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.