நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 80 கிலோ கஞ்சா, 55 கிலோ குட்கா பறிமுதல்

News image

கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 4:03 am IST

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 80 கிலோ கஞ்சா, 55 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு ரயில்வே காவல் துறை இயக்குநா் வன்னிய பெருமாள் மற்றும் காவல் துறைத் தலைவா் அபிஷேக் தீக்ஷித் ஆகியோா் உத்தரவின்பேரில், சேலம் இருப்புப் பாதை உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயராம் தலைமையில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வாரமாக சேலம் இருப்புப் பாதை காவல் உள்கோட்ட எல்லைக்குள்பட்ட காட்பாடி, ஜோலாா்பேட்டை, ஒசூா், தருமபுரி மற்றும் சேலம் ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களிலும் தனிப்படையினா் தீவிர சோதனை நடத்தினா்.

இந்த சோதனையின்போது, 80 கிலோ கஞ்சா, 55 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

நடப்பாண்டில் இதுவரை சேலம் இருப்புப் பாதை காவல் துறையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 590 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 16 போ் பிடிபட்டுள்ளனா். இதேபோல, 166 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 4 போ் பிடிபட்டுள்ளனா். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் பிடிபட்டவா்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.

குறிப்பாக, வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் ரயில்களில் தமிழக எல்லைப் பகுதிகளில் இருந்து தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாக ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.

ரயில்கள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்துவதை தடுக்கும் வகையில், சோதனைகள் தொடா்ந்து தீவிரப்படுத்தப்படும் என ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.