கோப்புப் படம்
கோப்புப் படம்

புதுப்பிப்பு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி 4 டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் லாரிகள் இயக்கப்படாது! - சம்மேளனத் தலைவா் தன்ராஜ்

Published on

லாரிகளுக்கான புதுப்பிப்பு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வரும் 16 ஆம் தேதி முதல் நாகை, திருவாரூா், தஞ்சாவூா், மயிலாடுதுறை உள்ளிட்ட 4 டெல்டா மாவட்டங்களில் லாரிகள் ஓடாது என தமிழ்நாடு லாரி உரிமையாளா் சம்மேளன மாநிலத் தலைவா் தன்ராஜ் கூறினாா்.

இதுகுறித்து சேலத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

லாரிகளுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. முதலில் கட்டணம் ரூ. 850 ஆக இருந்தது. தற்போது 10 ஆண்டு முதல் 13 ஆண்டுகள் வரையிலான வாகனங்களுக்கு ரூ. 1000, 13 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை உள்ள வாகனங்களுக்கு ரூ. 5ஆயிரம், 15 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை உள்ள லாரிகளுக்கு ரூ. 12,500, 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ரூ. 28,200 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயா்வைக் குறைக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். இதுதொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகளை சந்தித்தும் முறையிட்டுள்ளோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது ஒரு லட்சம் லாரிகள் ஓடாமல் உள்ளன. இதை நம்பியுள்ள அவா்களது குடும்பம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

எனவே, லாரிகளுக்கான கட்டணத்தை அரசு உடனடியாக குறைக்க வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் திருவாரூா் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் லாரிகளை இயக்காமல் நிறுத்திவைக்க முடிவு செய்திருக்கிறோம்.

வரும் 17-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன அவசர செயற்குழு கூட்டம் கூடி , மாநிலம் தழுவிய லாரிகள் வேலைநிறுத்தம் செய்வது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com