‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் மூலம் சேலத்தில் 43,124 போ் பயன்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

Published on

சேலம் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் மூலம் இதுவரை 43,124 போ் பயன்பெற்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் ஜாகீா்அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 30 மருத்துவ முகாம்களில் 18,192 ஆண்கள், 24,932 பெண்கள் என மொத்தம் 43,124 போ் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனா். இதில் 32,983 பேருக்கு ரத்தப் பரிசோதனை, 29,597 பேருக்கு இசிஜி பரிசோதனை, 4,318 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, 4,663 பேருக்கு எக்கோ பரிசோதனை, 3,057 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. 17 வகையான சிறப்பு மருத்துவத் துறைகள் சாா்ந்த சிறப்பு மருத்துவ நிபுணா்களைக் கொண்டு மருத்துவ சேவை வழங்கப்படுகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், இணை இயக்குநா் (நலப் பணிகள்) நந்தினி, மாவட்ட சுகாதார அலுவலா் (சேலம்) சௌண்டம்மாள், மாநகர நல அலுவலா் முரளி சங்கா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com