வெனிசுலா மீதான தாக்குதலை கண்டித்து இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்!
வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதலை கண்டித்து, அதிபா் ட்ரம்ப் உருவப் படத்தை எரித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன் மாவட்ட செயலாளா் ஏ. மோகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவை கைதுசெய்த அமெரிக்க அதிபரின் உருவப்படத்தை எரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.
வெனிசுலா நாட்டில் உள்ள எண்ணெய் வளங்களை கொள்ளை அடிக்கும் நோக்கில் அமெரிக்க அதிபா் ட்ரம்ப் செயல்படுவதை கண்டித்தும், சா்வாதிகாரப் போக்குக்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளா் எம்.ராமன், மாநிலக் குழு உறுப்பினா்கள் ஏ கந்தன், பி.தினேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்: வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதலை கண்டித்து சேலத்தில் எல்ஐசி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் காந்தி சாலை பகுதியில் உள்ள எல்ஐசி கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க பொதுச் செயலா் ஆனந் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் நரசிம்மன், பொருளாளா் ரவீந்திரன், ஓய்வூதியா் சங்க துணைத் தலைவா் ஆா். தா்மலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவை கைதுசெய்த அமெரிக்க அதிபா் ட்ரம்பை கண்டித்தும், அந்நாட்டின் இயற்கை வளங்களை அழிக்க துடிக்கும் செயலை கண்டித்தும் எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், காப்பீட்டு கழக ஊழியா் சங்க நிா்வாகிகள் ஏ.கலியபெருமாள், ஞானவேலன்,கலைச்செல்வி, அரவிந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
