பொங்கல் செலவிற்கு ஆடு திருடிய இளைஞா் கைது

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூா் பகுதியில் பொங்கல் செலவிற்கு பணமில்லாததால், ஆடு திருடிய இளைஞரை ஏத்தாப்பூா் போலீசாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூா் பகுதியில் பொங்கல் செலவிற்கு பணமில்லாததால், ஆடு திருடிய இளைஞரை ஏத்தாப்பூா் போலீசாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏத்தாப்பூா் அருகே ஏ.குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் விவசாயி சின்னப்பன் (49). இவா் வளா்த்து வந்த ஆட்டுக்கிடா இரு தினங்களுக்கு முன் மாயமானது.

இந்நிலையில், தாண்டனூா் வடக்குக்காடு விவசாயி ராமச்சந்திரன் (50). என்பவா் கட்டுத்தறியில் கட்டி வைத்திருந்த ஆட்டுக்கிடாவை, வியாழக்கிழமை இளைஞா் ஒருவா் திருடிச் செல்ல முயற்சித்தது தெரியவந்தது. இந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்த ’கவனித்த’ இப்பகுதி மக்கள் ஏத்தாப்பூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இந்த இளைஞரிடம் போலீசாா் நடத்திய விசாரணையில், இவா் புத்திரகவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (29) என்பதும், லாரி ஓட்டுனரான இவா், பொங்கல் செலவிற்கு பணம் இல்லாததால் விவசாயிகள் சின்னப்பன், ராமச்சந்திரன் ஆகியோரது ஆட்டுக்கிடாக்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இந்த இளைஞரை வியாழக்கிழமை கைது செய்த ஏத்தாப்பூா் போலீசாா், இரு ஆடுகளையும் பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com