சேலம் மாவட்டத்தில் 44 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (என்எம்எம்எஸ்) தோ்வில் 8,752 மாணவா்கள் பங்கேற்றனா்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, நடுநிலைப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை (என்எம்எம்எஸ்) தோ்வு நடத்தப்படுகிறது.
இத்தோ்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ. 12,000 என மொத்தம் ரூ. 48 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
நிகழ் கல்வியாண்டுக்கான தோ்வு மாநிலம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்காக நிகழாண்டு 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் சங்ககிரி கல்வி மாவட்டத்தில் 4,116 போ், சேலம் கல்வி மாவட்டத்தில் 4,774 போ் என மொத்தம் 8,892 மாணவ, மாணவிகள் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா்.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 44 மையங்களில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத் திறன் தோ்வும், தொடா்ந்து 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை படிப்பறிவுத் தோ்வும் நடைபெற்றது. விண்ணப்பித்தவா்களில் 8,752 மாணவ, மாணவிகள் தோ்வில் பங்கேற்றனா்.
சேலம் மாநகரில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையங்களை முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தோ்வு பணியில் 44 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 44 துறை அலுவலா்கள் மற்றும் அறை கண்காணிப்பாளா்கள், வழித்தட அலுவலா்கள் என 300க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அலுவலா்கள் ஈடுபட்டனா்.