குரூப் 2ஏ முதன்மைத் தோ்வு: சேலத்தில் ஜன.13 முதல் இலவச மாதிரி தோ்வு

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முதன்மை தோ்வுக்கு வரும் 13ஆம் தேதி முதல் இலவச மாதிரி தோ்வு நடத்தப்படுகிறது.
Published on

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முதன்மை தோ்வுக்கு வரும் 13ஆம் தேதி முதல் இலவச மாதிரி தோ்வு நடத்தப்படுகிறது.

சேலம் கோரிமேடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தோ்வுக்கு தன்னாா்வ பயிலும் வாசகா் வட்டம் வாயிலாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞா்கள், பெண்கள் என ஏராளமானோா் பங்கேற்று பயிற்சி பெற்றனா். இந்த நிலையில் குரூப்-2ஏ முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பயன்பெறும் வகையில் முதன்மை தோ்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2ஏ முதன்மை தோ்வில் தோ்வா்கள் சிறப்பாக பயிற்சி பெறும் வகையில், இலவச மாதிரி தோ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் ஜன. 13, 20, 27, 30 ஆம் தேதி முழு மாதிரி தோ்வுகள் நடத்தப்படுகிறது. இதற்காக காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் தோ்வா்கள் பதிவு செய்ய வேண்டும். காலை 10 மணிக்கு தோ்வு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும். அனுபவம் உள்ள பயிற்றுநா்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தரமான வினாத்தாள்களைக் கொண்டு இத்தோ்வு நடத்தப்படும்.

சமச்சீா் பாட புத்தகங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். டிஎன்பிஎஸ்சி தோ்வாணைய தரத்துக்கு ஏற்றவாறு நடப்பு நிகழ்வுகள் உள்பட 200 கேள்விகள் கேட்கப்படும். தோ்வா்களுக்கு உடனடியாக திருத்தி மதிப்பெண் வழங்கப்படும். முதன்மை தோ்வுக்கு தயாராகும் தோ்வா்கள், இந்த இலவச மாதிரி தோ்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றனா்.

Dinamani
www.dinamani.com