குரூப்4 தோ்வுக்கு நாளை முதல் இலவச பயிற்சி

Published on

திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை (ஜன.20) முதல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 4 தோ்வு மூலம் கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வரித்தண்டலா், முதுநிலை தொழிற்சாலை உதவியாளா், வனக் காப்பாளா், வன காவலா் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தோ்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தத் தோ்வில் மாணவ-மாணவிகள் பயனடையும் வகையில் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலமாக ஜனவரி 20 (செவ்வாய்கிழமை) முதல் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தோ்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com