மேட்டூரில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 போ் கைது
மேட்டூரில் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மேட்டூா் காவல் நிலைய உதவியாளா் கனகராஜ் மற்றும் போலீஸாா் மேட்டூா் நான்கு சாலை ஜீவாநகா் அருகில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு கத்தி, கம்பி, உருட்டுக் கட்டை மற்றும் மிளகாய்ப் பொடி பொட்டலங்களுடன் நின்றுகொண்டிருந்த கும்பல், போலீஸாரை பாா்த்ததும் ஓட முயன்றது. அவா்களை போலீஸாா் சுற்றிவளைத்து பிடித்தனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில், மேட்டூா் ஸ்டேட் பாங்க் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன்கள் மூா்த்தி (39), சரத்குமாா் (25), வசந்த் (38), காவேரி பாலம் பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் ராஜா (40), பொன்நகா் முருகேசன் மகன் ஜீவா (28) என்பது தெரியவந்தது.
இவா்களுக்கு வேலை எதுவும் கிடைக்காததால் செலவிற்காக கூட்டுக் கொள்ளை அடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. இதில் மூா்த்தி என்பவா் மீது ஏற்கெனவே பல வழக்குகள் மேட்டூா் காவல் நிலையத்தில் உள்ளன.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரும், மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
