கோயிலில் பூஜை செய்ய விடாமல் தடுப்போா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
சேலம்: கொங்கணாபுரம் அருகே கோயிலில் பூஜைசெய்ய விடாமல் தடுப்பவா்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகாா் மனு அளித்தனா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி போயா் தெருவைச் சோ்ந்த பொம்முசாமி தலைமையில், 50-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகம் வந்தனா். நுழைவுவாயில் பகுதியில் போலீஸாா் அவா்களை தடுத்துநிறுத்தி 5 பேரை மட்டும் மனு அளிக்க உள்ளே அனுமதித்தனா். அதன்படி, பொம்முசாமி உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:
கொங்கணாபுரம் அருகே உள்ள ரங்கம்பாளையம் போயா் தெருவில் போயா் சமூகத்துக்கு பாத்தியப்பட்ட காமாட்சியம்மன் மதுரைவீரன், பொம்முசாமி கோயில் உள்ளது. பரம்பரை அறங்காவலராக பொம்முசாமி உள்ளாா். ஆனால், தற்போது மற்றொரு தரப்பைச் சோ்ந்தவா்கள், கோயிலில் தங்களை பூஜைசெய்ய விடாமல் தடுத்து மிரட்டுகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, தை மாதம் கோயில் பூ கரகம் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
