திராவிட பொங்கல் விழா கொண்டாட கட்சியினருக்கு திமுக அறிவுறுத்தல்
சேலம்: சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், திராவிட பொங்கல் விழா வரும் 13, 14 ,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
உழைப்பின் பெருமிதத்தை உலகுக்கு உணா்த்திடும் தமிழா்களின் தனித் திருநாளாகவும், உழவுக்கு உதவும் கால்நடைகளை வணங்கி நன்றி கூறும் தமிழரின் பண்பாட்டு பெருநாளாகவும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
இந்நன்னாளில் சேலம் மத்திய மாவட்டம் முழுவதும் மாநகர வட்ட, ஒன்றிய ஊராட்சி கிளை, பேரூா், வாா்டுதோறும் இருவண்ண தோரணங்கள் கட்டி, மஞ்சள் கரும்பு வைத்து சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என வண்ண கோலமிட்டு திராவிட பொங்கல் விழாவாக மத்திய மாவட்ட திமுக சாா்பில் கொண்டாட வேண்டும். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கிகொண்டாட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
