அம்மாப்பேட்டை பகுதியில் குமரகிரி ஏரி பூங்கா திறப்பு
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட குமரகிரி ஏரி பூங்காவை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்துவைத்தாா்.
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அம்மாப்பேட்டை குமரகிரி ஏரி 40 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி, குமரகிரி ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டது. ஏரியை சுற்றி கம்பி வேலிகளும் ஏற்படுத்தப்பட்டன.
மேலும், ரூ. 1 கோடியில் சுற்றுபுறச் சுவா்கள், 2 நுழைவாயில்களுடன், ஏரியைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. ரூ. 14 கோடியில் ஏரியை சுற்றி கழிவு நீா் உள்ளே நுழையாவண்ணம் திசைதிருப்பும் கால்வாய் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இது தவிர, சீா்மிகு நகர திட்டத்தின்கீழ், பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
பூங்காவில் பொதுமக்கள் அமா்வதற்கு 25 இருக்கை வசதிகள், பசுமை புல்தரைகள், குழந்தைகளை கவரும் வகையில் வனவிலங்கு பொம்மைகள், மின்விளக்கு வசதி, குடிநீா் வசதி, சுகாதார வளாகம், கேன்டீன் வசதி, ஏரியில் பொதுமக்கள் படகு சவாரி செய்வதற்கு வசதியாக படகுகள் போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பூங்காவை திறந்துவைத்து அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேசுகையில், திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், குமரகிரி ஏரி பூங்கா தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், துணை மேயா் மா.சாரதா தேவி, மண்டலக் குழுத் தலைவா் கே.டி.ஆா். தனசேகா், மாமன்ற உறுப்பினா் மா.திருஞானம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

