இடங்கணசாலை நகராட்சியில் பாமகவினா் போட்டியாக பொங்கல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இடங்கணசாலை நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் நடைபெறும் சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு விழாவில் அனைத்து நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலக பணியாளா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்ள நகராட்சி ஆணையா் சுதா்சன் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
அதன்படி, காடையாம்பட்டி சந்தைத் திடலில் சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு பரிசளிப்பு விழா நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் பாமக நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொள்ளாமல் அனுமதியின்றி நகராட்சி அலுவலகம் முன் போட்டியாக பொங்கல் வைத்தனா். மேலும், குதிரையுடன் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மகுடஞ்சாவடி போலீஸாா் விரைந்து வந்து அனுமதி வழங்கிய இடத்தில் மட்டுமே பொங்கல் வைக்க வேண்டும் என தெரிவித்தனா். அதையும் மீறி அந்த இடத்தில் பாமகவினா் பொங்கல் வைத்ததால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.