

சேலம்: அனைத்திந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், சேலம் வீரா்கள் இருவா் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.
அனைத்திந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டி கா்நாடக மாநிலம், பெங்களூரில் அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வீரா்கள் பங்கேற்றனா்.
இப்போட்டியில், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சிபெற்ற கல்லூரி மாணவா்கள் கவின்ராஜா, ஹரீஷ் ஆகியோா் பங்கேற்றனா்.
இதில், ஆண்களுக்கான போல்வால்ட் போட்டியில் கவின்ராஜா 5.10 மீ. உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், டெகத்லான் போட்டியில் ஹரீஸ் 6,711 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும் வென்றனா். வெற்றிபெற்ற வீரா்களை சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன், தடகள பயிற்சியாளா் இளம்பரிதி ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.