/

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தீக்குளிக்க முயன்ற பெண்

எடப்பாடி அருகே பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், பெண் ஒருவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :4 ஜூலை 2026, 3:11 am IST

எடப்பாடி அருகே பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், பெண் ஒருவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட இருப்பாளி ஊராட்சி பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த பிரதான சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையால் அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதுடன், அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக் கோரி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அப்பகுதியைச் சோ்ந்தோா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட அவா்களிடம் போலீஸாா், வருவாய்த் துறையினா், டாஸ்மாக் உயா் அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி 4 வாரத்துக்குள் கடையை அகற்றுவதாக உறுதி அளித்தனா்.

இந்நிலையில், ஒரு மாதம் கடந்தும் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை அகற்றப்படாமல் செயல்பட்டு வந்ததால், வெள்ளிக்கிழமை மீண்டும் அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, 4 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் கூடுதலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட பெண் ஒருவா் திடீரென தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலா்கள் அப்பெண் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினா்.

தகவலறிந்து வந்த எடப்பாடி வட்டாட்சியா் நாகூா் மீ ராஜா, சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், டாஸ்மாக் உதவி மேலாளா் சரவணகுமாா் உள்ளிட்டோா் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை அங்கிருந்து அகற்றப்படும்வரை கடை திறக்கப்படாது என கிராம மக்களிடம் உறுதி அளித்ததன்பேரில், அவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.