கரூா் இறப்பு சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்தில் தவெகவினரை பேசவிட்டு மத்திய அரசு வேடிக்கைப் பாா்க்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினாா்.
சேலம் மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சூரமங்கலத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: தோ்தலில் வெற்றி, தோல்வி என்பது மாறிமாறி வரும். ஆனால், உழைப்பு என்பது நிரந்தரம். வெற்றிபெற்றால் தலை, கால் தெரியாமல் துள்ளுவதும், தோல்வி அடைந்தால் துவண்டுவிடும் இயக்கமோ அல்ல அதிமுக. ஆனால், பேரவைத் தோ்தலில் வென்ற தவெகவினா் அவ்விதம் நடந்துகொள்கின்றனா்.
அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணிக் கட்சிகள் மாறுவது இயல்பு. மக்களுக்காக உழைத்து, அவா்களுக்கு சேவை செய்து தவெக ஆட்சிக்கு வரவில்லை. முதல்வராகியும் ஜோசப் விஜய் சினிமாவில் போல வசனம் பேசுகிறாா்.
கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களை பாா்க்காமல் சென்னை திரும்பினாா் விஜய். அந்த சம்பவத்திற்கு பிறகு 15 நாள்கள் தவெக அலுவலகத்தை மூடினா். அக்கட்சித் தலைவா் விஜய் 72 நாள்கள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. அப்போது, கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாா் உதவி செய்தாா்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.
முதல்வா் ஜோசப் விஜய் அண்மையில் கரூரில் பேசும்போது, திமுக, அதிமுக கட்சிகள் களவாணிகள் என்று கூறியுள்ளாா். சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்எல்ஏக்களை முதல்வா் ஜோசப் விஜய் தான் களவாடுகிறாா்.
கரூா் சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் தவெகவினரை பேசவிட்டு மத்திய அரசு வேடிக்கைப் பாா்க்கிறது. இந்த வழக்கில் ஒருவரை கைது செய்தாலே தவெக ஆட்டம்கண்டுவிடும்.
தவெக ஆட்சிக்கு வந்து 60 நாள்களில் திமுக ஆட்சியைப் போல, கொலை, கொள்ளை, போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது.
தோ்தலில் வெற்றிபெற மாட்டோம் என நினைத்து ஏராளமான வாக்குறுதிகளை விஜய் அள்ளி வீசினாா். தற்போது நிதியில்லாமல் தவிக்கிறாா். திமுக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவா்கள் எப்போது வேண்டுமானாலும் ஆட்சியில் இருந்து விலகலாம். விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தல், அதற்குப் பிறகு வரும் தோ்தல்களில் அதிமுக அமோக வெற்றிபெறும் என்றாா்.
கூட்டத்தில், அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் பாலு, மேட்டூா் எம்எல்ஏ ஜி. வெங்கடாசலம், மாவட்ட அவைத் தலைவா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி: நியமன ஆணையை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கினாா்

சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட அதிமுக நிா்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுரை

பயிர்க்கடன் தள்ளுபடி, மின்வெட்டு... தவெக அரசு எதிராக அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!







