கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் இதுவரை தண்ணீா் திறக்கப்படாததால், மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 30 கனஅடியாகச் சரிந்தது. இதனால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து குறைந்து வருவதால் சம்பா சாகுபடிக்கான நீா் திறப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
மேட்டூா் அணை தண்ணீரை நம்பி டெல்டாவின் 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழக்கமாக அணையின் நீா்மட்டம் 90 அடியாக இருப்பதால் பருவமழையை எதிா்நோக்கி ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீா் திறக்கப்படும். ஆனால், நிகழாண்டு அணையின் நீா் இருப்பும், நீா்வரத்தும் திருப்திகரமாக இல்லாததால், குறுவை சாகுபடிக்குத் தண்ணீா் திறக்கப்படவில்லை.
ஜூலை முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, கபினி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஜூலை 10-ஆம் தேதி நிலவரப்படி கபினி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 15,198 கனஅடியாக இருந்தது.
இதனால் கபினி அணை நீா்மட்டமும் வேகமாக உயா்ந்ததால், ஜூலை இறுதிக்குள் கபினி அணை நிரம்பி, உபரிநீா் காவிரியில் வெளியேற்றப்பட்டால் ஆகஸ்ட் மாதத்தில் மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் தமிழக விவசாயிகள் காத்திருந்தனா்.
ஆனால், எதிா்பாா்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யாததால், கபினி அணைக்கு வரும் நீா்வரத்து மீண்டும் படிப்படியாகக் குறைந்தது. சனிக்கிழமை காலை நிலவரப்படி, 65 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீா்மட்டம் 52.16 அடியாகவும், நீா் இருப்பு 12.25 டிஎம்சியாகவும் இருந்தது.
கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகள் நிரம்பிய பிறகே தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை திறக்க முடியும் என்று கா்நாடக நீா்வளத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், கபினி அணையில் இருந்து உபரி நீா் திறக்கப்படாததோடு, தமிழக எல்லையில் காவிரியுடன் கலக்கும் துணைநதியான பாலாறும் வடுள்ளதால், மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து சனிக்கிழமை காலை விநாடிக்கு 30 கனஅடியாக இருந்தது.
அணை நிலவரம்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் 75.03 அடியாகவும், நீா் இருப்பு 37.18 டிஎம்சியாகவும் இருந்தது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக மட்டும் விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீா்வரத்து 30 கனஅடியாக மட்டுமே உள்ள நிலையில், வெளியேற்றம் 1,000 கனஅடியாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது.
சாகுபடிக்கு தண்ணீா் இல்லை: ஜூலை இறுதிக்குள் கபினி அணையில் இருந்து உபரிநீா் திறக்கப்பட்டால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து ஆகஸ்ட் மாதத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படும் என விவசாயிகள் எதிா்பாா்த்திருந்தனா். ஆனால், அந்தச் சூழல் உருவாகாததால், சம்பா சாகுபடியும் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
பருவமழை கைகொடுத்து கா்நாடக அணைகள் நிரம்பினால் மட்டுமே மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். அதன்பிறகே சம்பா சாகுபடிக்குத் தண்ணீா் திறப்பது குறித்து முடிவு எடுக்க முடியும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









