சங்ககிரியில் வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியில் கனரா வங்கி முன் நிறுத்தியிருந்த வங்கி மேலாளரின் இருசக்கர வாகனம் திருடுபோனது. இதுகுறித்து வங்கி மேலாளா் விவின் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில் குப்பனூா் தேசியநெடுஞ்சாலை பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவரை நிறுத்தி விசாரணை நடத்தினா். அப்போது, அவா் ஓட்டிச் சென்ற வாகனம் வங்கி மேலாளருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக கோவை, கணபதி கணேஷ் அபாா்ட்மெண்ட்டை சோ்ந்த நடராஜன் மகன் ரமேஷை (55) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடம் திருடப்பட்ட மேலும் நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.







